• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலண்டனில் பயங்கரவாத தாக்குதல்
  2017-03-23 11:16:26  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டன் தலைநகர் இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை எனப்படும் நாடாளுமன்ற கட்டிடத்தின் வெளியே, மார்ச் 22ஆம் நாள் மாலை பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதில், தாக்குதல் நடத்தியவர் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் கடும் காயமடைந்தனர்.

மார்ச் திங்கள் 22ஆம் நாள், பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்த ஓராண்டு நிறைவுக்கான நினைவு நாள் ஆகும். பிரசல்ஸில் நடைபெற்ற பல்வகை நினைவு நிகழ்ச்சிகளில் பிரிட்டன் மக்கள் கவனம் செலுத்திய இதே நாளில், இலண்டனின் மையப் பகுதியில் இத்தகைய பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

22ஆம் நாள் மாலை 2.40மணிக்கு, கருப்புநிற வாகனம் ஒன்று, நாடாளுமன்றக் கட்டிடத்தின் அருகே உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் உள்ள மக்களை நோக்கி மோதிக் கொண்டு சென்றது. தொடர்ந்து, புகழ்பெற்ற பிக் பென் எனும் மணிக்கூண்டு கோபுரம் வழியாக சென்று, இந்த வாகனம், இறுதியில் நாடாளுமன்றத்தின் முக்கிய நுழைவாயிலை நோக்கி சென்றடைந்துள்ளது. தாக்குதல் நடத்தியவரில் ஒருவர் வாகனத்தில் இருந்து வெளியேறி, கத்தியால் காவலர் ஒருவரைத் தாக்கினார். காவல்துறையினருடனான சண்டையில், இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம், பயங்கரவாத தாக்குதலாக இருப்பதாக பிரிட்டன் காவல்துறை அறிவித்துள்ளது.

தாக்குதல் நடந்த பிறகு, நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் அருகிலுள்ள சாலைகள் முற்றிலும் காவல்துறையினரால் தடை செய்யப்பட்டுள்ளன. இலண்டனின் கண் எனும் புகழ்பெற்ற சுற்றுலா தலமும் உடனடியாக மூடப்பட்டது.

நாடாளுமன்றக் கட்டிடம், பிரிட்டனின் அரசியல் இதயமாக கருதப்படுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் பகுதி, இலண்டனில் சுற்றுலா பயணிகள் அதிகமாகவே ஒன்றுகூடும் பகுதியாகும். அன்று மாலை, தலைமை அமைச்சர் தெரெச மே நாடாளுமன்றத்துக்கு சென்று, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பாக நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். தாக்குதல் நிகழ்ந்த பிறகு, காவல்துறையினரின் பாதுகாப்புடன் தெரெச மே விரைவாக வெளியேறினார். நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் மூடப்பட்டு 5 மணி நேரத்துக்கு பிறகு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அன்று இரவில், தெரெச மே இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அவசரக் கூட்டம் நடத்தினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து நடக்கும் பின்னணியில், பிரிட்டன் அரசு, பயங்கரவாத தாக்குதல் மீது உயர்நிலை விழிப்புணரவை நிலைநிறுத்தி வருகிறது. 2014ஆம் ஆண்டு தொடங்கி, பிரிட்டனில் பயங்கரவாத அச்சுறுத்தல், "கடும்" நிலைக்கு உயர்த்தப்பட்டது. ஐந்து நிலைகளில் 2வது நிலை கொண்ட இந்த முன்னெச்சரிக்கை, பயங்கரவாத தாக்குதல் ஏற்பட சாத்தியம் அதிகம் என்பதைக் குறிக்கிறது. பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்பு வாரியம் முன்பு தெரிவிக்கையில், 40 ஆண்டுகளில் இல்லாத மிக கடுமையான பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலை பிரிட்டன் தற்போது எதிர்கொள்கிறது. மேலும், 2013ம் ஆண்டு ஜுன் திங்கள் முதல், பிரிட்டனுக்கு எதிராக 13 பயங்கரவாத தாக்குதல் சதிகளை பிரிட்டன் காவல்துறை வெற்றிகரமாக தடுத்துள்ளது என்று பிரிட்டன் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040